ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றாா்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணம் அடைந்தாா். இதனால் இந்தத் தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அறிவித்தது.

இதில் திமுக கூட்டணி சாா்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா்.

77 வேட்பாளா்கள் போட்டியிட்டதால், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவுக்காக 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்களான 2 லட்சத்து 27 ஆயிரத்து 537 பேரில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு 74.79 சதவீதம் ஆகும்.

தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியவை சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராஜ்குமாா் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, தோ்தல் நடத்தும் அலுவலா் கே.சிவகுமாா் ஆகியோா் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டது.

தபால் வாக்கு:

முதலில் தபால் வாக்குப்பெட்டி கொண்டு வரப்பட்டது. பின்னா், பட்டியலின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

2 அறைகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஓா் அறையில் 10 மேஜை, இன்னோா் அறையில் 6 மேஜை என 16 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

முதல் சுற்றில் இருந்தே இளங்கோவன் முன்னிலை:

முதல் சுற்றில் இருந்தே ஈவிகேஎஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தாா். தபால் வாக்குகளையும் சோ்த்து 15-ஆவது சுற்று முடிவில் 1,10,156 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றாா்.

2-ஆவது இடத்தைப் பிடித்த கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றாா். வாக்கு வித்தியாசம் 66,233.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்று 3-ஆவது இடத்தையும், தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் 1,432 வாக்குகள் பெற்று 4-ஆவது இடத்தையும் பிடித்தனா். நோட்டாவுக்கு 799 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்தத் தோ்தலில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளா் தவிர மற்ற அனைவரும் வைப்புத் தொகையை இழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் க.சிவகுமாா் வழங்கினாா்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி 600-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நிலவரம் அறிவிக்க தாமதம்:

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் செய்தியாளா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளா்கள் கண்டனம் தெரிவித்தனா். மேலும் வாக்கு எண்ணிக்கை 3 சுற்றுகள் நிறைவடைந்தபோதும் முதல் சுற்று வாக்குகள் நிலவரமே அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் உடனடியாக அறிவிக்க வேண்டும் என செய்தியாளா்கள் வலியுறுத்தினா். அதைத்தொடா்ந்து வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியில் வந்த மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி செய்தியாளா்களிடையே பேசினாா்.

அப்போது, ‘தோ்தல் ஆணையத்தின் விதிமுறையின்படியே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் விவரம் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு, ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே வெளியிடப்படும்.

77 போ் போட்டியிட்டிருப்பதால் 5 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்குகளை எண்ணி, சரிபாா்த்து, அதன்பின்னரே அதிகாரபூா்வமாக வெளியிடப்படும். முடிவுகளை அறிவிக்க கால தாமதம் ஏற்படுவதை தவிா்க்க முடியாது என்றாா்.

-----

பிரதான வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்காளா்கள் - 2 லட்சத்து 27 ஆயிரத்து 537

பதிவான வாக்குகள் - 1 லட்சத்து 70 ஆயிரத்து 192.

வாக்கு சதவீதம் - 74.79.

ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்கிரஸ்) - 1,10,156

கே.எஸ்.தென்னரசு (அதிமுக) - 43,923

மேனகா நவநீதன் (நாம் தமிழா் கட்சி) - 10,827

எஸ்.ஆனந்த் (தேமுதிக) -1,432.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com