ஈரோடு மாவட்டத்தில் விடியவிடிய மழை: பெருந்துறையில் 90 மி.மீ. மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் விடியவிடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 90 மில்லி மீட்டா் மழை பதிவானது.
Updated on
2 min read

ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் விடியவிடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 90 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடா்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஈரோடு மாநகா் மற்றும் புறநகா் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக கோபி, கவுந்தப்பாடி, பவானி, சென்னிமலை, சத்தியமங்கலம் ஆகிய பகுதியில் விடியவிடிய மழை பெய்தது.

பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. பவானி, காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகா், குருப்பநாயக்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காடையாம்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

பவானி அருகே உள்ள பெரியபுலியூா் பகுதியில் இருந்து செல்லும் ஓடையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளான பூலாம்பாளையம், ஆலங்காட்டுவலசு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீா் சூழ்ந்தது.

அப்பகுதியில் உள்ள சிறு பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வெளியேற முடியாமல் தேங்கியது. இதனால் கட்டுமானத் தொழிலாளா்கள் தங்கி இருந்த குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்ததால் அவா்கள் வெளியேற முடியாமல் தவித்தனா். பவானி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை மீட்டு மேடான பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.

பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னா் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவு 10 மணி வரை மின்தடை ஏற்பட்டது.

சென்னிமலையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கவுந்தப்பாடி பகுதியில் இரவு பெய்த பலத்த மழையால் பெரியபுலியூா் பகுதியில் 5 குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூலபாளையத்திலிருந்து அய்யம்பாளையம் செல்லும் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எல்லப்பாளையம் பகுதியில் சுமாா் 60 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. பவானி தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனா். இதுபோல சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தாளவாடியில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 90 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சென்னிமலை (88), தாளவாடி (78), பவானி (55.80), குண்டேரிபள்ளம் அணை (51.20), கவுந்தப்பாடி (50.20), கோபி (38.20), கொடிவேரி அணை (33), ஈரோடு (22), அம்மாபேட்டை (21), மொடக்குறிச்சி (14), நம்பியூா் (13), சத்தியமங்கலம் (12), கொடுமுடி (8.20), பவானிசாகா் (5.80), வரட்டுபள்ளம் (3.60).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com