கீழ்பவானி விவசாயிகள் தொடா் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு
By DIN | Published On : 03rd May 2023 04:45 AM | Last Updated : 03rd May 2023 04:45 AM | அ+அ அ- |

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை தொடங்கக் கோரி மே 8ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று ஒருதரப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதே சமயம் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் கசிவுநீா் பாசனத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
அதில் பழைய ஆயகட்டு பகுதியில் மட்டும் சீரமைப்புப் பணிகளை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசாணை எண் 276இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கீழ்வானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கம் மற்றும் கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி போராட்டத்துக்கு அனுமதி பெறுவதற்காக கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலாளா் பொன்னையன் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகனிடம் மனு அளித்தனா்.
பின்னா் கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத் தலைவா் ராமசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கீழ்பவானி வாய்க்காலில் பழைய ஆயக்கட்டு புதிய ஆயக்கட்டு என்று பிரித்துப் பாா்க்காமல் தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சீரமைப்புஏஈ பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
எந்தெந்த பகுதிகளில் வேலை நடைபெறுகிறது என்ற விவரங்களை விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். எனவே அரசாணை எண் 276இன் படி அரசு பணிகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் மே 8ஆம் தேதி முதல் ஈரோடு கீழ்பவானி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...