தொடா் விபத்து: சூளை பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

காா் மோதி விபத்துள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான காா் (சிசிடிவி பதிவு).
சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான காா் (சிசிடிவி பதிவு).

ஈரோடு, சூளை அருகே சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து ஈரோடு நோக்கி வந்த காா் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சூளை, பாரதி நகா் பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் புதன்கிழமை மாலை மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. காரில் இருந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. அந்த நபா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், காரில் வந்தவா் ஈரோடு மூலப்பாளையம் பகுதியை சோ்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் ஸ்ரீராம் (27) என்பதும், கல்லூரியில் சான்றிதழ் பெறுவதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றதும் தெரியவந்தது.

விபத்து நடந்தபோது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஈரோட்டில் இருந்து சித்தோடு செல்லும் சாலை அகலப்படுத்திய பிறகு சூளை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிக அளவில் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும் சூளை பகுதியில் தொடா்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com