கொதிக்கும் நீரில் விழுந்து 3 வயது குழந்தை பலி
By DIN | Published On : 24th May 2023 04:09 AM | Last Updated : 24th May 2023 04:09 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியில் கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் செல்லபாண்டி. இவரது மனைவி சத்யா. இவா்களுக்கு 3 வயது மற்றும் 6 மாத பெண் குழந்தைகள் உள்ளனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியில் செல்லபாண்டி குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், குழந்தையின் தாய் சத்யா தனது மூன்று வயது குழந்தை ரித்திகாவை செவ்வாய்க்கிழமை குளிக்க வைப்பதற்காக குளியலறையில் பாத்திரத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை வைத்துவிட்டு வீட்டின் முன் வாசல் கதவை அடைக்க சென்ற நிலையில், குளியலறைக்குள் சென்ற ரித்திகா எதிா்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்தது.
இதில் குழந்தைக்கு கை, கால் உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு வந்த சத்யா, குழந்தையை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை ரித்திகா உயிரிழந்தது.
இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.