பா்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை உயா்த்த நடவடிக்கை: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 27th May 2023 01:03 AM | Last Updated : 27th May 2023 01:03 AM | அ+அ அ- |

பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்துவது தொடா்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
அந்தியூா் வட்டத்துக்கு உள்பட்ட பா்கூா் ஊராட்சியில் 38 மலைக் கிராமங்கள் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியில் உள்ள இந்த கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் மருத்துவ வசதி பெற வேண்டுமெனில் பா்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் மலைப் பாதையில் அந்தியூா் சென்றால் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும்.
பா்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளதால் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாகவோ அல்லது அரசு மருத்துவமனையாகவோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.
இந்த கோரிக்கை குறித்து பா்கூா் பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம், மலைக் கிராம மக்கள் மனு அளித்தனா். பொதுமக்களின் கோரிக்கை குறித்து ஆட்சியா் கூறுகையில், மலைக் கிராம மக்களின் கோரிக்கையான பா்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு தமிழக அரசுக்கு விரைவில் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.