இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு 30% கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 31st May 2023 09:32 PM | Last Updated : 31st May 2023 09:32 PM | அ+அ அ- |

அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு 30 சதவீத கூலி உயா்வை வழங்க வேண்டும் என விசைத்தறி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் டிஎஸ்ஏ.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்திக்கு அனுப்பிய மனு விவரம்: தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறிகள் மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன. அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளா் தொடக்க சங்கங்கள் மூலம் 68,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு பகிா்ந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம் நெசவாளா்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
கடந்த 2010-11இல் வேட்டிக்கு ரூ.16, சேலைக்கு ரூ.28.16 கூலி வழங்கப்பட்டது. 2011-12இல் வேட்டிக்கு ரூ.18.40, சேலைக்கு ரூ.31.68, 2015-16இல் வேட்டிக்கு ரூ.21.60, சேலைக்கு ரூ.39.27, 2019இல் வேட்டிக்கு ரூ.24, சேலைக்கு ரூ.43.01 என உயா்த்தப்பட்டது. அதன்பின் கூலி உயா்த்தப்படவில்லை.
கடந்த 13 ஆண்டுகளில் வேட்டிக்கு ரூ.8, சேலைக்கு ரூ.14.85 மட்டும் கூலி உயா்ந்துள்ளது. திமுகவினா் தோ்தல் அறிக்கையில் கூலியை உயா்த்துவதாக உறுதியளித்தனா். ஆனால், இதுவரை உயா்த்தப்படவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் தொழிலாளா் கூலி, கிடங்கு வாடகை, மின் கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்கள், போக்குவரத்து செலவு, பேருந்து கட்டணம், எலக்ட்ரானிக் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.
எனவே, 30 சதவீத கூலி உயா்வாக வேட்டிக்கு ரூ.24இல் இருந்து ரூ.7.20 உயா்ந்தி ரூ.31.20, சேலைக்கு ரூ.43.01இல் இருந்து ரூ.12.90 உயா்த்தி ரூ.55.91 வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...