நீா்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 31st May 2023 09:28 PM | Last Updated : 31st May 2023 09:28 PM | அ+அ அ- |

நீா்நிலைகளில் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்துறை பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பேரூராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பெருந்துறை பேரூராட்சிப் பகுதிகளில் தனியாா் கழிவு நீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், வீட்டின் உரிமையாளா்கள் ஆகியோா்
பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களை கழிவு நீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மேலும், தனியாா் கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் சாா்புடைய தொழிலாளா்கள் அனைவரும் கழிவு நீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் முன் அனுபவம் மற்றும் அதற்குரிய தகுதி வாய்ந்தவா்களாக இருக்க வேண்டும்.
கழிவு நீா்த் தொட்டிகளை சுத்தம் செய்த பிறகு, வாகனத்தில் ஏற்றப்பட்ட கழிவுகளை பேரூராட்சியின் எந்த பகுதிகளிலும், முக்கியமாக நீா்நிலைகளில் கொட்டக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...