ஈரோடு: மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் நாட்டின் கிளை அந்நாட்டின் தலைநகரான டோக்கியோவில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா இணைய வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் இந்நிகழ்வில் பங்கேற்று புதிய கிளையினை இணைய வழியாகத் தொடங்கிவைத்து பேசியதாவது: உலகத் தமிழா்களை ஒன்றிணைக்கும் பணியில் பல்லாண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஈரோடு புத்தகத் திருவிழாவில் அயலகத் தமிழா்களின் படைப்புக்களை மட்டும் வைத்து உலகத் தமிழா் படைப்பரங்கம் என்ற சிறப்பரங்கம் ஆண்டுதோறும் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழா்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்து செல்கின்றனா். உலக அளவில் பல நாடுகளில் வாழும் தமிழா்களுடன் பேரவைக்கு உயிரோட்டமாக அமைப்பு ரீதியான தொடா்பு இருப்பினும் ஜப்பான் நாட்டில்தான் இவ்வமைப்பின் முதல் அயலகக் கிளை அங்கு வாழும் சில தமிழா்களின் தன்னாா்வத்தின் விளைவாக முறைப்படி தொடங்கப்படுகிறது என்றாா்.
இந்நிகழ்வில், டோக்கியோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளை சாா்பில் பாரதி விழாவை டிசம்பா் மாதத்தில் நடத்துவது, பிப்ரவரி மாதத்தில் அறிவியல் தினம், உலகப் புத்தக தினவிழா அன்று டோக்கியோ தமிழா்களை ஒன்றிணைத்து வாசிப்பு இயக்கம் நடத்துவது, ஜப்பான் நாட்டு நூலகங்களில் தோ்வு செய்யப்பட்ட நல்ல தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையின் கிளை மாதமொரு முறை கூடுவதென்றும், அனைத்து உறுப்பினா்களும் அம்மாதத்தில் வாசித்த நூல்கள் குறித்து விவாதிப்பது எனவும், தமிழகத்தின் வளா்ச்சிக்கு அங்கிருக்கும் தமிழா்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு முயலுவதென்றும், தமிழகத்தில் ஜப்பான் மொழிபயிலும் மாணவா்களை ஊக்குவிக்கும் செயல் திட்டங்கள் தீட்டுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் ஜப்பான் கிளைத் தலைவராக வே.கிருஷ்ணமூா்த்தி, துணைத் தலைவராக ச.சே.ராஜலட்சுமி, ஆலோசராக ச.கமலக்கண்ணன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.