சேதமடைந்த சாலையை சீரமைக்க ஆலனை மலை கிராம மக்கள் கோரிக்கை
By DIN | Published On : 21st November 2023 01:59 AM | Last Updated : 21st November 2023 01:59 AM | அ+அ அ- |

ஈரோடு: சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு) வே.லதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அந்தியூா் வட்டம், பா்கூா் அருகேயுள்ள ஆலனை மலைப் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: பா்கூா் ஊராட்சி ஆலனையில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியினா், லிங்காயத் சமூகத்தினா் வசிக்கிறோம்.
இந்த பகுதியில் கொங்காடை செல்லும் சாலை முதல் ஆலனை கிராமம் வரை சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவு உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாய நிலங்களில் விளையும் விளைபொருள்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும், மழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைத்து, புதிதாக தாா் சாலை அமைத்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்: இது குறித்து கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம், செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் கீழ்பவானி வாய்க்கால் மேட்டுப்பாளையம் கிளை வாய்க்கால், இரட்டைவாய்க்கால், கடைகோடி வாய்க்கால் பகுதியில் விவசாயம் செய்கிறோம். அந்த பகுதியில் சிலா் நிலம் வாங்கி, வாய்க்காலை அழித்து ஆக்கிரமித்து பயிா் செய்கின்றனா்.
இதனால், நேரடியாக 35 ஏக்கா் நிலங்களைக் கொண்டுள்ள 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கிறோம்.
இது குறித்து புகாா் அளித்தும் நீா் வளத் துறையினா் அளவீடு செய்துவிட்டு கூறுவதாக தெரிவிக்கின்றனா். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை: இது குறித்து பவானி அருகே உள்ள ஜம்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு கூலித் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்குச் சொந்தமாக நிலமோ, வீட்டுமனை இடமோ இல்லை. எனவே, இந்த பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...