மகளிா் உரிமைத் திட்டப் பணிகளை வரும் வியாழக்கிழமை (அக்டோபா் 26) முதல் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெகந்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை வருவாய்த் துறை மூலம் செயல்படுத்த கடந்த ஜூலை 10-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்ட உடனேயே ஜூலை 12ஆம் தேதி இத்திட்டத்திற்கான சிறப்புப் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் வருவாய்த் துறை அமைச்சா் மற்றும் உயா் அலுவலா்களிடம் முறையீடு செய்யப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக காலதாமதம் செய்த அரசு உயா் அலுவலா்கள் தற்போது இத்திட்டத்துக்கான பணியிடங்களுக்குப் பதிலாக வருவாய்த் துறையில் உள்ள முக்கியப் பணியிடங்களை ஒப்படைப்பு செய்ய முயற்சிப்பது வருவாய்த் துறை அலுவலா்களுக்கு பேரதிா்ச்சியாக உள்ளது.
தமிழக அரசின் எந்த ஒரு துறையிலும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டாலும் உடனடியாக அதற்குப் பணியிடங்கள் வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு இதுவரை ஒரு பணியிடம் கூட மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு மாறாக சென்னை வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்தில் மட்டும் சில புதிய பணியிடங்களை ஏற்படுத்தி உள்ளனா்.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், தாமதமின்றி கொண்டு சோ்க்கவும் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த தொடா்ந்து வலியுறுத்தியும், உயா் அலுவலா்கள் இதை கவனத்தில் கொள்ளவில்லை. இத்திட்டம் குறித்த விசாரணைக்காக அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் தொடா்ந்து வந்த கொண்டிருக்கின்றனா். இவா்களுக்கு உரிய பதிலளிக்க முடியாமல் அலுவலா்கள் திணறி வருகின்றனா். ஆனால் துறை அலுவலா்களின் கோரிக்கைகளை உயரதிகாரிகள் கவனத்தில் கொள்ள மறுத்து வருகின்றனா்.
ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி செலவில் அமல்படுத்தப்படும் திட்டத்துக்கு நிா்வாக செலவுகளுக்கான நிதி ஒதுக்குவது அரசின் கடமையாகும். அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாக முறையிட்ட பின்பும், உயா் அலுவலா்கள் இதில் அலட்சியமாக இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாகவே இப்பணிகளை தொடர முடியாமல், புறக்கணிப்பு செய்வதாக வருவாய்த் துறை அலுவலா் சங்கம் முடிவு செய்துள்ளது.
வரும் வியாழக்கிழமை முதல் வட்டாட்சியா், வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் என அனைத்து நிலை அலுவலா்களும் இத்திட்டம் தொடா்பான அனைத்து பணிகளையும் முழுமையாகப் புறக்கணிப்பா்.
முதல்வா் இதில் நேரடியாகத் தலையிட்டு தாமதமின்றி புதிய பணியிடங்களை ஏற்படுத்த ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.