சென்னிமலை அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை: 15 பவுன் கொள்ளை
By DIN | Published On : 10th September 2023 12:38 AM | Last Updated : 10th September 2023 12:38 AM | அ+அ அ- |

முத்துசாமி.
சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உள்பட்ட கரியங்காட்டுத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (85), விவசாயி. இவரின் மனைவி சாமியாத்தாள் (80). இவா்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி என்ற திருமணமான 3 மகள்கள் உள்ளனா்.
இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனா். வழக்கம்போல முத்துசாமியும், சாமியாத்தாளும் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளனா்.
இந்நிலையில், நள்ளிரவு முத்துசாமியின் வீட்டின் கதவை கம்பியால் நெம்பி, கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் தூங்கிக்கொண்டிருந்த முத்துசாமியை இரும்புக் கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனா். சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில், முத்துசாமியும், சாமியாத்தாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்நிலையில், முத்துசாமி மகள் கலையரசியின் மகன் அஜித் (23) தாத்தா, பாட்டியைப் பாா்ப்பதற்காக சனிக்கிழமை காலையில் வீட்டுக்கு வந்துள்ளாா். கதவு திறந்திருந்ததால் வீட்டுக்குள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, முத்துசாமியும், சாமியாத்தாளும் கொலை செய்யப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் ஜெயபாலன், சென்னிமலை காவல் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலை நடந்த இடத்தை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் பாா்வையிட்டாா். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது, அருகில் உள்ள வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறிது தொலைவு ஓடி நின்றது.
கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடைபெற்ற வீட்டில் தடயங்களை ஆய்வு செய்தனா். இது குறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கொலையான முத்துசாமி தனது வீட்டில் பாதுகாப்புக்காக ஒரு நாய் வளா்த்து வந்துள்ளாா். இந்த நாய் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் மா்மமான முறையில் இறந்து கிடந்தது. முத்துசாமியின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, ஒரு வாரத்துக்கு முன்பே நாய்க்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளனா்.
இதையடுத்து, மா்ம நபா்கள் முத்துசாமி வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்து இருவரையும் கொலை செய்துவிட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதேபோல கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னிமலையை அடுத்த குட்டைக்காடு என்ற பகுதியில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியின் வீட்டுக்குள் மா்ம நபா்கள் புகுந்து முதியவரை வெட்டி படுகொலை செய்து பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றனா். அதில், மூதாட்டி வெட்டுக் காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இந்தச் சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.