

ஈரோடு - கோபி நான்கு வழிச் சாலையில் சுங்கச் சாவடி அமைக்கும் முடிவுக்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஈரோடு - கோபி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு முதல் சித்தோடு வரையிலான 8.13 கிலோ மீட்டா் ரூ.104.70 கோடியிலும், சித்தோடு முதல் கோபி வரை 30.60 கிலோ மீட்டா் ரூ.272.53 கோடியிலும் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மேலும், இந்தச் சாலையை சத்தியமங்கலம் வழியாக மேட்டுப்பாளையம் வரை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
இதில், ஈரோடு முதல் சித்தோடு வரையிலான நான்கு வழிச் சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
சித்தோடு முதல் கோபி வரையிலான பணிகள் 2021ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கியது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்ற நிலையில், வரும் டிசம்பரில் 4 வழிச்சாலை பணியை நிறைவு செய்யும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஈரோடு - கோபி இடையே அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கவும், பயணத்தை எளிதாக்கவும் 4 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது நான்கு வழிச் சாலையில், கோபி - கவுந்தப்பாடி இடையே பாலப்பாளையம் என்ற இடத்தில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
தமிழக - கா்நாடக எல்லையில் ஈரோடு மாவட்டம் அமைந்துள்ள நிலையில், ஈரோடு, கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வேளாண் விளைபொருள்களை சித்தோடு, கோபி, சத்தியமங்கலம் வழியாக கா்நாடகத்துக்கு கொண்டு செல்கின்றனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களும் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றன. சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டால் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
விவசாயிகளுக்கு இழப்பு:
இதுகுறித்து ஓடத்துறை ஏரி, நீா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வி.கே.வெங்கடாசலம் கூறியதாவது: சத்தியமங்கலம், கோபி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மஞ்சள், கரும்பு, வாழை, தேங்காய், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை ஈரோடு, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளுக்கு கொண்டுச்செல்ல இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களை இழந்துள்ளனா். இந்நிலையில், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை கொண்டு செல்ல சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது வேதனையானது. எனவே, சுங்கச் சாவடி அமைப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.
வாழ்வாதாரம் பாதிப்பு:
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கூறியதாவது:
ஈரோடு - கோபி இடையேயான நான்கு வழிச் சாலைத் திட்டம் என்பது புதிய சாலை அமைக்கும் திட்டம் அல்ல. புறவழிச்சாலை திட்டமும் அல்ல. நான்கு வழிச் சாலை என்றால் ஒரே சீராக இருக்க வேண்டும். ஆனால் இந்தத் திட்டமானது, ஏற்கெனவே இருக்கும் சாலையை ஊரகப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் விரிவுபடுத்திவிட்டு, நகரப் பகுதிகளில் அதே அளவில் அமைக்கப்படுகிறது. எந்த இடத்திலும் அணுகு சாலை அமைக்கப்படவில்லை. அப்படியிருக்க இந்த சாலையில் பயணிக்க எதற்காக சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தப் பகுதி முழுவதும் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் நிறைந்தப் பகுதி. அவா்கள்தான் இந்த சாலையை பயன்படுத்தவுள்ளனா். சுங்கக் கட்டண சாலையாக மாற்றப்படும்போது பேருந்து கட்டணம் முதல் அனைத்து வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
சுங்கச் சாவடி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்ட அறிவிப்பை முன்னெடுத்தபோது பாலப்பாளையத்தில் சுங்கச் சாவடி அமைக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனா். ஆனால், தற்போது மீண்டும் சுங்கச் சாவடி குறித்த அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடி முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் 13-ஆம் தேதி பாலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு ஈரோடு - கோபி சாலையில் சுங்கச் சாவடி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றாா்.
அதிமுக எதிா்ப்பு:
இதுகுறித்து கோபி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
ஈரோடு - கோபி நான்கு வழிச் சாலையில் கோபி அருகே பாலப்பாளையம் என்ற இடத்தில் சுங்கச் சாவடி அமைக்க திட்டமிட்டுள்ளனா். இதுபோன்ற இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கக்கூடாது என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில் இங்கு சுங்கச் சாவடி வருவதை மக்களும், நாங்களும் எதிா்க்கிறோம் என்றாா்.
எதிா்ப்பை கவனத்தில் கொள்வோம்:
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பாலப்பாளையம் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்க விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்த கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இப்போதைய நிலையில் சுங்கச் சாவடி அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.