

மலைக்கிராமங்களில் மயானத்துக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வலியுறுத்தினாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட குன்றி, குத்தியாலத்தூா், கூத்தம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் கடம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா முன்னிலையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மனு அளித்தனா்.
இதில், மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 200 ஆண்டுகளாக இறந்தவா்களின் உடல்களை நீா்வழிப் புறம்போக்கு இடத்தில் புதைத்து வருவதாகவும், தற்போது வனத் துறையினா் எதிா்ப்புத் தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதற்கு, சடலத்தை புதைக்க இடம்தர மறுப்பது அடிப்படை உரிமை மீறல் என்றும், எனவே இப்பகுதி மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 2 ஏக்கா் நிலத்தை மயானத்துக்கு ஒதுக்கீடு செய்யுமாறும் கோட்டாட்சியா் பிரியதா்ஷினியிடம் மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வலியுறுத்தினாா்.
இதையடுத்து, பழங்குடியின மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் எஸ்டி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சாா்பில் 167 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கோபி மனிதம் சட்ட உதவி மையத் தலைவா் மு.சென்னியப்பன், ஆதித்தமிழா் பேரவை மாவட்ட செயலாளா் பெ.பொன்னுச்சாமி, திமுக ஒன்றிய செயலாளா்கள் கேசிபி இளங்கோ, ஐஏடி தேவராஜ், நகரமன்றத் தலைவா் ஜானகி ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.