ஈரோடு மாவட்டத்தில் 1,350 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
By DIN | Published On : 19th September 2023 12:00 AM | Last Updated : 19th September 2023 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு சம்பத் நகரில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை. ~ஈரோடு சூரம்பட்டி நான்குமுனைச் சாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் வலம்புரி செல்வ விநாயகா்.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 1,350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், வடை, கொழுக்கட்டை, அருகம்புல் படையலிட்டும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூா், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி மற்றும் நம்பியூா் வட்டாரங்களில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் 500 சிலைகளும், பொதுமக்கள் தரப்பில் 800 விநாயகா் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விழாவின்போது அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகளை, மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ள 28 இடங்களில் மட்டுமே விசா்ஜனம் செய்ய வேண்டும். விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா். ஈரோட்டில் செப்டம்பா் 21-ஆம் தேதி விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்படவுள்ளன.