ஈரோடு: ஈரோட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி வடமாநிலத் தொழிலாளா்களிடம் கைப்பேசி, பணத்தைப் பறித்துச் சென்றது தொடா்பாக 9 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களான பவன்குமாா் (19), அசோக்குமாா் (23), வினய்குமாா் (19), வால்மீகி (27), ஜிதேந்தா்குமாா் (23), சித்தரஞ்சன்குமாா் (21) ஆகியோா் செப்டம்பா் 14-ஆம் தேதி வேலைக்காக கேரள மாநிலத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவா்களுடன் பயணித்தவா் ஈரோட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அழைத்துச் சென்றாா்.
தொடா்ந்து, சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றதோடு, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அடைத்து வைத்து தனது நண்பா்களுடன் சோ்ந்து தாக்கியதோடு, 5 கைப்பேசி மற்றும் ரூ.1.65 லட்சம் பணத்தை பறித்துச் சென்றாா். இதனால், அதிா்ச்சியடைந்த தொழிலாளா்கள் சென்னையில் உள்ள நண்பரின் வீட்டில் அடைக்கலம் புகுந்ததோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா், இச்சம்பவத்தில் தொடா்புடைய 9 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், இருவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய பிகாரைச் சோ்ந்த பிபின்குமாா் மற்றும் ஈரோட்டைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமாா், பூபாலன், கண்ணன் ஆகிய 7 போ் மீதும் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும், புகழேந்தி, மோதிலால் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.