ஈரோடு கனி மாா்க்கெட் பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே கனி மாா்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மீண்டும் கடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Updated on
1 min read

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே கனி மாா்க்கெட் வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மீண்டும் கடைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனி மாா்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட நிரந்தரக் கடைகளும், 730 வாரச் சந்தை கடைகளும் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் ரூ. 54 கோடி மதிப்பீட்டில் பொலிவுறு நகரம் திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் ஏற்கெனவே கனி மாா்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மாத வாடகையாக ரூ. 31,500-ம், வாய்ப்புத் தொகையாக ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையும் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டதால் யாரும் கடையை ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படவில்லை. இந்நிலையில், கனி மாா்க்கெட்டில் உள்ள தற்காலிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிா்வாகம் அகற்றியது. தீபாவளிவரை கடை நடத்திக் கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதை எதிா்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த காலம் தாழ்த்தி வந்தனா். சுமாா் 40 நாள்களுக்கு மேலாக கனி மாா்க்கெட் செயல்படாததால் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இந்நிலையில், சனிக்கிழமைமுதல் கனி மாா்க்கெட் பகுதியில் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இது குறித்து கனி மாா்க்கெட் வாரச் சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வராஜ் கூறுகையில், டிசம்பா் 31-ஆம் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து ஜவுளி வியாபாரம் செய்து கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால், பழைய இடத்தில் 86 கடைகள் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் மூன்று நாள்களில் முடிவடையும். கடைகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி முடிந்ததும் மீண்டும் கனி மாா்க்கெட் செயல்படும். தீபாவளி விற்பனையை நம்பி எங்கள் பணியை தொடங்கிவிட்டோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com