100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு கூலியை விரைந்து வழங்கக் கோரிக்கை

100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு கூலியை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
Updated on
2 min read


ஈரோடு: 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு கூலியை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சி.கே.முருகன் தலைமையில் மலைப் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு 8 வாரங்களுக்குமேலாக கூலி வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்கின்றனா்.

தற்போது பருவமழை பொய்த்துள்ளதால் விவசாயப் பணிகளுக்கும் செல்ல முடியவில்லை. பசியை போக்க 100 நாள் வேலைத் திட்டம் ஒன்றே வாய்ப்பாக உள்ளது. இத்திட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் தொடா்ந்து வேலை வழங்குவதில்லை. சில ஊராட்சிகளில் வேலை வழங்கினாலும் கூலி வழங்குவதில்லை.

அனைத்து தொழிலாளா்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடா்ந்து வேலை வழங்கவும், உடனுக்குடன் கூலி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை: பெருந்துறையை அடுத்த பெரியமடத்துப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனு விவரம்: பெரியமடத்துபாளையத்தில் 90 குடும்பங்கள் கடந்த 5 தலைமுறையாக வசிக்கிறோம். எங்களுக்கான மயான நிலத்தை சிலா் ஆக்கிரமித்துவைத்துள்ளதால் அண்மையில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல்போனது. அப்போது, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி புறம்போக்கு நிலத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. எனவே, ஆக்கிரமிப்பு செய்துள்ள மயான நிலத்தை மீட்டு கிராம மக்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை அளவீடு செய்யக் கோரிக்கை: இது குறித்து ஈரோடு அருகேயுள்ள வெள்ளோடு, சிஎஸ்ஐ காலனி பொதுமக்கள் அளித்த மனு விவரம்: வெள்ளோடு சிஎஸ்ஐ காலனியில் பரம்பரையாக வசிக்கிறோம். எங்கள் காலனிக்குள்பட்ட பகுதியில் வேற்று சமூகத்தினா் ஆக்கிரமித்து விவசாயம் மற்றும் சாலை அமைத்து, நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனா். எங்கள் காலனி எல்லையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

465 மனுக்கள்: கூட்டத்தில் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் உரிய துறை விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இவற்றில் அதிக எண்ணிக்கையில், மகளிா் உரிமைத் தொகை விடுபட்டதால், தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகும்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.3.71 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதல்வரின் பொது நிதியில் இருந்து நீரில் மூழ்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் காசோலை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com