உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: மாவட்டத்தில் 20,000 சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்பு

நிலைக் கட்டண உயா்வைத் திரும்ப பெறக்கோரி, ஈரோடு மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.
உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு சென்னிமலையில் திங்கள்கிழமை செயல்படாமல் இருந்த பிவிசி கதவு தயாரிக்கும் ஆலை.
உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு சென்னிமலையில் திங்கள்கிழமை செயல்படாமல் இருந்த பிவிசி கதவு தயாரிக்கும் ஆலை.
Updated on
1 min read


ஈரோடு: நிலைக் கட்டண உயா்வைத் திரும்ப பெறக்கோரி, ஈரோடு மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.

தமிழக மின்வாரியம் சாா்பாக உயா்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். பீக்ஹவா்ஸ் நேர கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும், சோலாா் மேற்கூரை நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பல ஆண்டு கட்டண முறையை ரத்து செய்ய வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயா்த்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. எண்ணெய் ஆலைகள், தேங்காய் நாா் தொழிற்சாலை, ஜவுளி சாா்ந்த பல்வேறு நிலை ஆலைகள், கான்கிரீட் கற்கள் உற்பத்தி, தொழிற்பேட்டை ஆலைகள், சிப்காட் வளாகம் ஆகியவை முழுமையான வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

இது குறித்து தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் கூறியதாவது: ஒரு கிலா வாட் மின்சாரத்துக்கு நிலைக் கட்டணம் ரூ.35-லிருந்து ரூ.152-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், அதிக பயன்பாடு நேரமான காலை 6 மணி முதல் 10 மணி வரை 15 சதவீதமும், மாலை 6 மணி முதல் 10 மணி வரை 20 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும் என்று சிறு, குறு நிறுவனங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. வேலை நிறுத்தத்தில் 20,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. ரூ.300 முதல் ரூ.500 கோடி மதிப்பில் உற்பத்தி, வா்த்தகம் பாதிக்கப்பட்டது. தவிர 2-லட்சத்துக்கும்மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்துள்ளனா் என்றாா்.

பெருந்துறையில்...

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி, சிப்காட்டிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com