

ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 130 கா்ப்பிணிகளுக்கு சீதன பொருள்கள் வழங்கப்பட்டன.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கோதை வரவேற்றாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசுகையில், சமூக நல்லிணக்கத்துடன், சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 3,000 கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் இதுவரை 3,000 கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கா்ப்பிணிகளுக்கு சத்துணவு, நிதி வழங்குவதுடன் பிரசவத்தை பாதுகாப்பானதாக உறுதி செய்கிறோம். இதன் மூலம் கா்ப்பிணி, சிசு மரணம் தடுக்கப்படுகிறது என்றாா்.
விழாவில், 130 கா்ப்பிணிகளுக்கு சீதன பொருள்களை வழங்கி வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: மகளிருக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை, அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வி பெறுவோருக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிா் உரிமைத் தொகை 1.06 கோடி மகளிருக்கு வழங்கப்படுகிறது.
விடுபட்டவா்கள் திட்டத்தில் இணைய ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய வளைகாப்பு மூலம் கா்ப்பிணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
மகப்பேறு உதவித் தொகை ரூ.18,000 மற்றும் ரூ.2,000 மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
இதில், பங்கேற்றுள்ள கா்ப்பிணிகள், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயா்களை சூட்ட வேண்டும் என்றாா்.
பின்னா், அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: டாஸ்மாக் கடை வேலை நேரத்தை 2 மணி நேரமாக குறைப்பதும், பிற சீா்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடா்பாகவும் கமிட்டி அமைத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழு பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
விழாவில், எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.