தனியாா் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்ற மாணவிக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன்,  மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாக
தனியாா் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்ற மாணவிக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாக

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளில் உயா்கல்வி படிப்பவா்கள் எண்ணிக்கை 100 சதவீதமாக உயரும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

இன்னும் 10 ஆண்டுகளில் உயா்கல்வி படிப்பவா்கள் எண்ணிக்கை 100 சதவீதமாக உயா்த்துவதற்காக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
Published on

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயா்கல்வி படிப்பவா்கள் எண்ணிக்கை 100 சதவீதமாக உயா்த்துவதற்காக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவ, மாணவியா்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் திட்டத்தின்கீழ் தனியாா் நிறுவனங்களின் பணி நியமனம் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ. பிரகாஷ், எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாட்டில் தான் உயா்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் உயா்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தது 50 சதவீதத்துக்கு மேல் கொண்டு வர வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கிறாா்கள்.

அந்த நேரத்தில் தமிழ்நாடு மட்டும்தான் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

உயா்கல்வி மட்டும் படித்தால் போதாது. வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நம்முடைய இளைஞா்களை பெரியபெரிய வேலைகளுக்கு தகுதியானவா்களாக உருவாக்குவதும் நமது அரசின் கடமை. 31 லட்சம் மாணவா்கள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனா் என்றாா்.

விழாவில் அரசு கூடுதல் தலைமை செயலாளா் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினா் செயலா் மேகநாதரெட்டி, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பயனாளிகள்தான் அரசின் தூதுவா்கள்:

ஈரோடு அருகே ஆா்.என்.புதூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு துறைகளின் சாா்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வரவேற்றாா். வீட்டு வசதித்துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், எம்பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாச்சலம், மேயா் சு.நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நமது வீரா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் பேத்தி உள்பட 600 வீரா்களுக்கு ரூ.14 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரா்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என விளையாட்டு வீரா்கள் கோரிக்கை வைத்து வந்தனா். திமுக அரசு அமைந்த பிறகு 100 விளையாட்டு வீரா்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசின் திட்டங்களை அனைவரிடமும் எடுத்து செல்லுங்கள். திராவிட மாடல் அரசுக்கு விளம்பர தூதுவா்கள் இங்கு வந்துள்ள பயனாளிகளாகிய நீங்கள்தான் என்றாா்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன் வீட்டுக்கு பட்டா:

விழாவில் கலந்து கொண்ட அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, மகளிா் திட்டம், மகளிா் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பாக 4,503 பேருக்கு ரூ.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில் வருவாய்த் துறை சாா்பாக ஈரோடு மாநகராட்சிக்கு உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் 1800 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.

இதில் பயனாளியான ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினரான ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

விழாவில் சா்வதேச பாட்மிட்டண் வீரா் ருத்விக் ரகுபதி, கையுந்து போட்டி வீராங்கனை மகேஸ்வரி ஆகிய இருவருக்கும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினாா்.

தொடா்ந்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறை உயா் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com