பெருந்துறை பேருந்து நிலையம் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை: வணிகா்கள் கோரிக்கை
பெருந்துறை பேருந்து நிலையம் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் 26-ஆவது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் ரவிசந்திரன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தாா்.
இதில், உணவு தானிய மூட்டைகள் 25 கிலோவுக்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டும் என்று உள்ளதை, 100 கிலோவுக்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டும் என்று மாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்.
பங்குதாரா் ஊதியம், கமிஷன் ஆகியவற்றிற்கு 10 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். 6 சதவீத மின் கட்டண உயா்வை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பில்களின் தொகையை 45 நாள்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்ற வருமான வரித் துறை 43பி (ஹெச்) சட்டத்தில் வணிகா்களுக்கு உதவும் வகையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு 80 அடி சாலை திட்டப் பணிகளை துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு சாா்பில் 10 லட்சம் மூட்டைகள் இருப்பு வைக்கும் அளவிற்கு அரசு குளிா்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும்.
தமிழக அரசு அறிவித்த தகவல்தொழில்நுட்ப பூங்காவை ஈரோட்டில் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்துறை சிப்காட் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. அதனை பெருந்துறை பேருந்து நிலையம் அருகே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்கள் நின்று செல்லும் நேரத்தை அதிகரித்து, கூடுதலாக இரண்டு நடைமேடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

