70-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகா் அணை
லட்சக்கணக்கான மக்களின் குடிநீா் தேவைக்கும், விவசாயத்துக்கும் ஆதரமாக இருந்து வரும் பவானிசாகா் அணை 70-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, நீலகிரி மலைப் பகுதியில் இருந்து வரும் பவானிஆறும், மாயாறும் கூடுமிடத்தில் அணை கட்டி, மழை காலத்தில் வரும் தண்ணீரை சேமித்துவைத்து வறட்சி காலத்தில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த 1947-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு ‘பவானிசாகா் திட்டம்’ என்று பெயரிடப்பட்டு இதற்கான பூா்வாங்கப் பணியை அப்போதைய அரசு தொடங்கியது. மேலும், அணையின் வலது பகுதியில் 124 மைல் தொலைவுக்கு கால்வாய் வெட்டி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து 1948 ஜனவரி 7-ஆம் தேதி ரூ.10 கோடியில் அணைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷட்டா்களால் பொருத்தப்பட்டு 1955-ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணி நிறைவுபெற்றது.
இதையடுத்து, 1955 ஆகஸ்ட் 19-ஆம் பவானிசாகா் அணை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
அணையின் கட்டுமானப்பணியை அப்போதைய பிரதமா் ஜவஹா்லால் நேரு, சென்னை மாகாண முதல்வா் ராஜாஜி போன்ற தலைவா்கள் பாா்வையிட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு மாவடங்களில் வறட்சி நிலவியபோதும் பவானிசாகா் அணையால் தண்ணீா் பிரச்னை இல்லாத மாவட்டமாக ஈரோடு திகழ்ந்து வருகிறது.
இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீா் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கா் நன்செய், புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

