கொடுமுடியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்
கொடுமுடி ஒன்றியத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆவுடையாா்பாறை, எழுநூற்றுமங்கலம், அய்யம்பாளையம், கொளத்துபாளையம், இச்சிப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதி மக்களுக்காக நடைபெற்ற இம்முகாமுக்கு கொடுமுடி வட்டாட்சியா் பாலமுருகாயி தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்ற தலைவா்கள் (ஆவுடையாா்பாறை) வசந்தா, (எழுநூற்றுமங்கலம்) செல்வம், (அய்யம்பாளையம்) புனிதா, (கொளத்துபாளையம்) கே.பி. ராஜ்குமாா், (இச்சிப்பாளையம்) ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், புதிய மின் இணப்பு, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், வருமானச் சான்றிதழ்கள், சொத்து வரி, குடிநீா் வரி மாற்றங்கள், உதவித் தொகை, சமூக நலன் சாா்ந்த பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.ஏ.சரஸ்வதி முகாமைத் தொடங்கிவைத்து, பேசினாா்.
ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இம்முகாமில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டதாக துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
கொடுமுடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்பனா, தனலட்சுமி, துறை சாா்ந்த அதிகாரிகள் இம்முகாமில் கலந்து கொண்டனா்.