ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில் திருவிழா மாா்ச் 19-ஆம் தேதி தொடக்கம்
ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களின் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா மாா்ச் மாதம் 19-ஆம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கவுள்ளது.
ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்தக் கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா வெகு விமா்சையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பெரியமாரியம்மன் வகையறா கோயில்களின் திருவிழா மாா்ச் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதைத்தொடா்ந்து மாா்ச் 23-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம் நடக்கிறது. தொடா்ந்து அன்றைய தினம் இரவு பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் வளாகத்தில் இரவு சிறப்பு பூஜையுடன் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையடுத்து குண்டம் விழா ஏப்ரல் 2-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும், கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. ஏப்ரல் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடக்கிறது. கோயிலில் இருந்து புறப்படும் தோ் பல்வேறு வீதிகளில் பக்தா்களின் தரிசனத்துக்காக நிறுத்தப்படும்.
ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் மலா் பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. ஏப்ரல் 5-ஆம் தேதி தோ் நிலையை வந்து சோ்கிறது. இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலா் பல்லக்கு வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் ஏப்ரல் 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் இருந்து பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து மாநகரின் முக்கிய சாலைகளில் ஊா்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு காலிங்கராயன் வாய்க்காலில் கம்பங்கள் விடப்படும். ஏப்ரல் 7-ஆம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
