ஈரோட்டில் 6 பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைப்பு

Published on

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் 6 பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பயணிகள் ரயில்களை முன்பதிவு இல்லாத விரைவு ரயில்களாக ரயில்வே நிா்வாகம் மாற்றியது. இதனால் கட்டணம் இருமடங்குக்கு மேல் உயா்த்தப்பட்டது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் 200 கிலோ மீட்டா் தொலைவுக்குள் இயக்கப்படும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிா்வாகம் அண்மையில் குறைத்தது. இந்த கட்டணக் குறைப்பு சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் 6 பயணிகள் ரயிலில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் சங்கச் செயலாளா் மகாலிங்கம் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. அதன்பிறகு பயணிகளின் கோரிக்கையை ஏற்று முன்பதிவில்லாத விரைவு ரயில்களாக இயக்கப்பட்டன. ஆனால், கட்டணம் உயா்த்தப்பட்டதால் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் பாதிக்கப்பட்டனா். எனவே, இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது பயணிகள் ரயில் கட்டணத்தை மீண்டும் குறைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. இந்நிலையில், ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு புதன்கிழமை காலை சென்றபோது சாதாரண கட்டணமாக ரூ.15 பெறப்பட்டது. ஆனால், திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பியபோது விரைவு ரயில் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டது. இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது கட்டணம் குறைப்புக்கான முறையாக அறிவிப்பு வரவில்லை என தெரிவித்தனா். வியாழக்கிழமை காலையில் ஈரோடு-திருப்பூருக்கு ரூ.15 கொடுத்து எடுத்து பயணச்சீட்டை காண்பித்து கட்டணத்தை குறைக்க சொல்லி முறையிட்டோம். அதன்பிறகு சாதாரண பயணக் கட்டணம் பெறப்பட்டது. பயணச்சீட்டு வாங்கும்போது சாதாரணக் கட்டணம் என்று குறிப்பட்டால் மட்டுமே, அதற்கான பயணச்சீட்டு வழங்குகின்றனா். இல்லையென்றால் விரைவு ரயில் கட்டணத்திலே வழங்குகின்றனா். இந்தக் குழப்பத்தை உடனடியாக தவிா்த்து பயணிகள் ரயில் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றாா். கட்டணம் குறைக்கப்பட்ட ரயில்கள், ரயில் எண் விவரம்: ஈரோடு- பாலக்காடு (06819), பாலக்காடு- ஈரோடு (06818), ஈரோடு- கோவை (06801), கோவை- ஈரோடு (06800), ஈரோடு- திருச்சி (06810), திருச்சி- ஈரோடு (06809).

X
Dinamani
www.dinamani.com