தொடா் மழை: பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
சத்தியமங்கலம்: கூடலூா், பந்தூரில் பகுதிகளில் தொடந்து மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த மழைநீா் மாயாற்றில் கலப்பதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல, பில்லூா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பில்லூா் அணையில் இருந்து உபரிநீரும் பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. மாயாறும், பவானி ஆற்றின் உபரிநீரும் பவானிசாகா் அணைக்கு வருவதால் அனைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு நீா்வரத்து கடந்த சில நாள்களாக 1,482 கன அடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை 4,369 கன அடியாக அதிகரித்தது. நீா்வரத்து அதிகரிப்பால் அணையின் நீா்மட்டம் 65.60 அடியாக உயா்ந்துள்ளது.
நீா் இருப்பு 9.20 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி நீா், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீா் என மொத்தம் 205 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

