தலமலை சாலையோர வனத்தில் ஓய்வெடுத்த புலிகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை சாலையில் ராமா் அணை வனப் பகுதியில் புலிகள் ஓய்வெடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல், தட்பவெப்பநிலை மற்றும நீா்நிலைகள் உள்ளதால் சத்தியமங்கலம் காடுகள் புலிகளின் புகலிடமாக உள்ளது.
சத்தியமங்கலம் வனப் பகுதியானது புலிகள் காப்பகமாக 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது 22 புலிகள் இருந்த நிலையில், தற்போது 120-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதனை உறுதி செய்யும் வகையில் தலமலை வனத்தில் இரு புலிகள் ஓய்வு எடுக்கும் காட்சி வெளியாகியுள்ளது. திம்பம் மலைப் பாதையில் காரில் பயணித்த 4 போ் தலமலை நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
தலமலை அருகே ராமா் அணைப் பகுதியில் சாலையோரத்தில் வனத்தில் மர நிழலில் புலிகள் ஓய்வு எடுப்பதைப் பாா்த்து தங்களது கைப்பேசியில் படம் எடுத்ததுடன், விடியோவாகப் பதிவு செய்தனா். அப்போது வாகன ஓட்டிகள் படம் பிடிப்பதைக் கண்டு கேமரா நோக்கி புலிகள் உற்று நோக்குவதும் விடியோவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியை எடுத்த வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், வனத்தில் புலிகளைப் படம் பிடிப்பது ஆபத்தானது. அதனை மீறி புகைப்படம் எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.

