ஈரோடு
பவானிசாகா் அணையில் இருந்து இன்று தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தண்ணீா் திறக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. அணையில் தற்போது 69 அடிக்கு மேல் நீா் இருப்பு உள்ளது.
இந்நிலையில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில், பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல்போக பாசனத்திற்கு வெள்ளக்கிழமை (ஜூலை 12) முதல் நவம்பா் 8-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளது.
இதன்மூலம் கோபி, அந்தியூா், பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் 24 ஆயிரத்து 504 ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.

