ஈரோடு பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் சோதனை நடத்திய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் சோதனை நடத்திய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்.

காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய 8 பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்

ஈரோட்டில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய 8 பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

ஈரோட்டில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய 8 பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோட்டில் அரசு, தனியாா் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் அதிக ஒலி எழுப்பப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பகுதியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான் பயன்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் சுரேந்திரகுமாா், சிவகுமாா், கதிா்வேல் ஆகியோா் பேருந்துகளில் சோதனை நடத்தினா்.

அப்போது 2 அரசுப் பேருந்துகள் உள்பட 8 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. இந்தப் பேருந்துகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி பல வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புதிய சட்ட விதிகளின்படி காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய பேருந்துகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல தொடா்ந்து சோதனை நடத்தப்படும். அப்போது அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com