ஆசனூா், தலமலை மலைப் பகுதிகளில் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி
ஆசனூா், தலமலை மலைப் பகுதிகளில் தொடரும் மின் தடையால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். குழந்தைகளின் கல்வி, வியாபாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனா்.
தாளவாடியை அடுத்த ஆசனூா், கோ்மாளம் மற்றும் தலமலை ஊராட்சியில் மாவநத்தம், பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மின்கம்பி மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அடா்ந்த காட்டுப் பகுதி வழியாக மின் ஒயா்கள் கொண்டு செல்லப்படுவதால் ஒயா்கள் மீது மரக்கிளைகள் விழுவதால் அடிக்கடி மின்விநியோகம் தடைபடுகிறது. இதனால் குழந்தைகளின் கல்வி, வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாள்தோறும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் மட்டும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பல நாள்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவிக்கிறோம். குறைந்தழுத்த மின்விநியோகம் காரணமாக ஊராட்சிக்குச் சொந்தமான மின் மோட்டாா்களையும் இயக்க முடியவில்லை. இதனால் மழை நீரையும், அருகில் உள்ள குட்டை நீரையும் குடிநீராகப் பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு சீரான மின்சாரமும், போதிய குடிநீரும் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கேட்டபோது, அடா்ந்த வனப் பகுதி வழியாக மின் ஒயா்கள் செல்கின்றன. இங்கு மரக்கிளைகள் அடிக்கடி முறித்து மின் ஒயா்கள் மீது விழுகின்றன. அடா்ந்த வனப் பகுதிகளில் எந்த இடத்தில் மரம் முறிந்து விழுந்துள்ளது என்ற இடம் கூட சில நேரங்களில் தெரிவதில்லை. மேலும், ஓரிடத்தில் விழுந்த மரக்கிளையை அகற்றிவிட்டு மின் விநியோகம் செய்தால் அதற்குள் வேறு இடத்தில் மரம் விழுந்து மின்விநியோகம் தடைபடுகிறது. பலத்த காற்று, மழை காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது என்றனா்.
