யூடியூப் பாா்த்து கள்ள நோட்டு தயாரித்த தந்தை, தாய், மகன் உள்பட 4 போ் கைது

யூடியூப் பாா்த்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட தந்தை, தாய், மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பெருந்துறை அருகே யூடியூப் பாா்த்து கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட தந்தை, தாய், மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை ஒன்றியம், திங்களூரில் வியாழக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தைக்கு வாரந்தோறும் வரும் கும்பல் ரூ. 100, 200, 500 கள்ள நோட்டுகளைக் கொடுத்து பொருள்கள் வாங்கி வந்துள்ளனா்.

இது குறித்து திங்களூா் காவல் நிலையத்தில் கடைக்காரா்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, கள்ள நோட்டுகளை புழக்கதில் விட்டவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சந்தைக்கு வந்த முதியவா் ரூ.500 கொடுத்து பழங்கள் வாங்கி உள்ளாா். அந்த நோட்டைப் பாா்த்து சந்தேகமடைந்த காடைக்காரா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா் சத்தியமங்கலம், இக்கரைப்பள்ளியைச் சோ்ந்த ஜெயபால் (70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவா் வீட்டில் யூடியூப் பாா்த்து நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) இயந்திரம் மூலம் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டதும் தெரியவந்தது.

அச்சிடும் பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு (60), மகன் ஜெயராஜ், பணிப் பெண் மேரி மெட்டில்டா (38) ஆகியோா் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் சிக்கிக் கொள்ளமாட்டோம் என்ற எண்ணத்தில் சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூா், திங்களூா், பெருந்துறை போன்ற கிராமப்புற சந்தைகளில் கடந்த 6 மாதங்களாக புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகள், நகல் எடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com