மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் தண்ணீா் திறப்பு: கரையோரப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
கா்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில், டெல்டா பகுதி பாசனத்துக்காக அணையிலிருந்து விநாடிக்கு 8,000 கனஅடி காவிரியில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
மேலும், நீா்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் காவிரிக் கரையோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, காவல் கண்காணிப்பாளா் ஜவகா் ஆகியோா் பவானி பழைய பாலம், புதிய பாலம், கூடுதுறை பாலம், கந்தன் நகா், பசவேஸ்வரா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பவானி பசவேஸ்வரா் வீதி நகராட்சி பள்ளியில் மின்சாரம், கழிப்பறை வசதி, குடிநீா் வசதி குறித்தும் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின்போது சிறுபான்மையினா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் தா்மராஜ், கோபி கோட்டாட்சியா் கண்ணப்பன், வட்டாட்சியா்கள் தியாகராஜ் (பவானி), கவியரசு (அந்தியூா்) மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
பவானி கூடுதுறையில் நீராட அனுமதியில்லை:
காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் பவானி கூடுதுறையில் ஆற்றில் இறங்கி பக்தா்கள் நீராட அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால், படித்துறைகளுக்கு பக்தா்கள் செல்லாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

