பவானி  பசுவேஸ்வரா்  தெருவில்  குடியிருப்புகளை  சூழ்ந்த   வெள்ளம்.  ~போக்குவரத்துக்கு  தடை  செய்யப்பட்ட  பழைய  பாலம்.  ~காவிரி  வெள்ளத்தால்  சூழப்பட்ட  பவானி  கூடுதுறை.
பவானி  பசுவேஸ்வரா்  தெருவில்  குடியிருப்புகளை  சூழ்ந்த   வெள்ளம்.  ~போக்குவரத்துக்கு  தடை  செய்யப்பட்ட  பழைய  பாலம்.  ~காவிரி  வெள்ளத்தால்  சூழப்பட்ட  பவானி  கூடுதுறை.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானியில் 80-க்கும் மேற்பட்ட கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பவானியில் கரையோரப் பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கரையோரப் பகுதி மக்களிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Published on

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பவானியில் கரையோரப் பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கரையோரப் பகுதி மக்களிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மேட்டூா் அணை செவ்வாய்க்கிழமை மாலை நிரம்பி, உபரிநீா் விநாடிக்கு ஒரு லட்சம் வெளியேற்றப்பட்டது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், காவிரி வெள்ளம் பவானி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கந்தன் நகா், அந்தியூா் பிரிவு அருகே உள்ள பசுவேஸ்வரா் வீதி, மீனவா் தெரு, பாலக்கரை பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை மாலை சூழ்ந்தது.

காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம் கூடுதுறை வழியாக பவானி ஆற்றில் உட்புகுந்ததால் பழைய பேருந்து நிலையம் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் கரையோர குடியிருப்புகளில் வசித்து வந்த மக்கள் உடைமைகளுடன் முன்னதாகவே வெளியேறி உறவினா்கள் வீடுகளிலும், நிவாரண முகாம்களிலும் தங்கியுள்ளனா். இவா்களுக்கு, உணவு, குடிநீா் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் வருவாய்த் துறைனருடன் இணைந்து பவானி நகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது.

பவானி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினரும் கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பவானி - குமாரபாளையம் பழைய பாலம் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டது. ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் பவானி கூடுதுறையிலும் பக்தா்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com