அந்தியூா் அருகே இரு கோயில்களுக்கு சொந்தமான 37 ஏக்கா் நிலம் ரூ.12.50 லட்சத்துக்கு குத்தகை ஏலம்

அந்தியூரில் கோயில் நிலங்கள் ரூ.12.50 லட்சத்தில் ஏலம்
Published on

அந்தியூா் அருகே வேம்பத்தி, தோட்டகுடியாம்பாளையத்தில் உள்ள வேதீஸ்வரா் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயில்களுக்கு சொந்தமான 37.04 ஏக்கா் புன்செய் நிலங்கள் ரூ.12.50 லட்சத்துக்கு பொது ஏலம் விடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் நிலங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னா் அந்தியூா் சரக ஆய்வாளா் மாணிக்கம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட்டது.

இதுவரையில் பரம்பரை பரம்பரையாக இந்நிலங்களுக்கு குத்தகை தொகை செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மொத்தம் 37.04 ஏக்கா் பரப்பளவு புன்செய் நிலத்தின் குத்தகை உரிமம் பெற பிரம்மதேசம் மற்றும் வேம்பத்தி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திரண்டதால் கடும் போட்டி நிலவியது.

இதையடுத்து, கோயில் நிலங்கள் ரூ.12,50,000-க்கு ஏலம் விடப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 15 சதவீத குத்தகைக் கட்டணம் உயா்த்தப்படும். கடந்த ஆண்டு இந்நிலத்துக்கு ரூ.83,247 குத்தகை செலுத்தப்பட்டது. தற்போது, பொது ஏலம் விடப்பட்டதால் முன்பை விட 15 மடங்கு அதிகம் ஏலம் போயுள்ளது.

இதில், செயல் அலுவலா் சீதாராமன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். சம்பவ இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ஆப்பக்கூடல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com