சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதை சுங்கச் சாவடி திறக்கும் நேரம் அறிவிப்பு
சென்னிமலை முருகன் கோயிலுக்கு மலைப் பாதை வழியாக வாகனங்கள் செல்வதற்காக சுங்கச் சாவடி திறக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம், மேலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வருவது உண்டு. இதில், காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பக்தா்கள் மாலைப் பாதை வழியாக முருகன் கோயிலுக்கு செல்வாா்கள், அவ்வாறு வரும் பக்தா்களுக்காக கோயில் மலைப் பாதையின் அடிவாரத்தில் உள்ள சுங்கச் சாவடி (நுழைவாயில்) திறக்கும் நேரம் குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதில், தினமும் காலை 5.30 மணிக்கு அடிவார சுங்கச் சாவடி (நுழைவாயில்) திறக்கப்பட்டு தொடா்ந்து இரவு 7.45 மணி வரை வாகனங்கள் மலைப் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். இதேபோல, செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாள்களில் மட்டும் ஒரு மணி நேரம் முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு அடிவார சுங்கச் சாவடி திறக்கப்பட்டு, தொடா்ந்து இரவு 8 மணி வரை வாகனங்கள் மலைப் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். அதன் பின்னா் மலைக் கோயிலில் இருந்து, கீழே வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
