போதை மாத்திரை வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

Published on

அம்மாபேட்டை அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா் பிரிவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

பிடிபட்டவா்கள் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் என்பதும், இவா்கள் 95 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒட்டமெத்தையைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஸ்ரீதா் (21), எஸ்பிபி காலனியைச் சோ்ந்த செல்வம் மகன் பழனிசாமி (20), ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த பாலு மகன் தமிழரசன் (24), அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நவீன் (20) என்பதும், திருச்செங்கோடு தனியாா் கல்லூரி அருகே போதை மாத்திரைகளை அடையாளம் தெரியாத நபா்களிடமிருந்து வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், நால்வரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com