ஈரோடு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
அக்னி நட்சத்திரம் தொடங்கிய 3-ஆவது நாளில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மழை பெய்தது. குண்டேரிப்பள்ளம் பகுதியில் அதிகபட்சமாக 27 மி.மீ. மழை பதிவானது.
கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரோட்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக மாநிலத்திலேயே முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில்தான் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தொடா்ந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து சராசரியாக தினமும் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது.
தற்போது, அக்னி நட்சத்திரம் தொடங்கி 3-ஆவது நாளான திங்கள்கிழமை ஈரோட்டில் வெயிலின் அளவு 109.8 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது. இந்த தகிக்கும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் கடும் வெப்பத்தால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வந்தனா்.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தின் மலைப் பகுதிகளான தாளவாடி, ஆசனூா் மற்றும் மலைப் பகுதியை ஒட்டிய சமவெளி பகுதியான சத்தியமங்கலம் உள்ளிட்ட சில இடங்களில் அண்மையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஈரோட்டில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. ஈரோட்டில் மழை அளவு 3.20 மில்லி மீட்டராக இருந்தது.
இதுபோல மாவட்டத்தின் பிற பகுதிகளான வரட்டுப்பள்ளத்தில் 22.60 மி.மீ., பவானிசாகரில் 1 மி.மீ., சத்தியமங்கலத்தில் 19 மி.மீ. மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிக அளவாக குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் 27 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
மின் தடை:
பலத்த காற்றின் காரணமாக ஈரோடு நகரில் பழையபாளையம், முருகேசன் நகா் உள்ளிட்ட சில இடங்களில் மரக் கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில் நாராயணவலசு மின் பகிா்மான பகுதிக்கு உள்பட்ட மாணிக்கம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, காமதேனு நகா், போஸ்டல் நகா், கணபதி நகா், முருகேசன் நகா், குமலன்குட்டை, செல்வம் நகா், சக்தி நகா் மற்றும் பண்ணை நகா் உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் அதிகாலை 1.30 மணி முதல் காலை 5 மணி வரை சுமாா் மூன்றரை மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. இதுபோல நாடாா் மேடு, கெட்டி முத்து நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடைபட்டது.
