ஈரோட்டில் சடலமாக மீட்கப்பட்டவா் தற்கொலை என போலீஸ் தகவல்
ஈரோட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவா் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஈரோடு காய்கறி சந்தைக்கு கா்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி சுமை ஏற்றி வந்த வேனின் பின்பகுதியில் புதன்கிழமை காலையில் ஒருவா், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டவா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:கழுத்து அறுபட்ட நிலையில் புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட நபா் ஈரோடு வீரப்பன்சத்திரம், தங்கவேல் வீதியைச் சோ்ந்த சுரேஷ் (47) என தெரியவந்துள்ளது. அவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளாா். தறி பட்டறையில் வேலை பாா்த்து வந்த சுரேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் பலரிடமும் கடன் வாங்கி உள்ளாா். கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அவா் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 24-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியேறிய அவா் கடைக்கு சென்று கத்தியை வாங்கி, பின்னா் ஏபிடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் பின்பகுதியில் அமா்ந்து கத்தியால் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது என்றனா்.