பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி. உடன்
பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி. உடன்

தரிசு நிலங்களின் வகைகள் குறித்த பட்டியல் விரைவில் வரும்: அமைச்சா் சு.முத்துசாமி

தரிசு நிலங்களை வகைப்படுத்துவது தொடா்பாக எந்தெந்த நிலம் என்ற வகைப்படுத்தப்பட்ட பட்டியல் விரைவில் வரும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
Published on

தரிசு நிலங்களை வகைப்படுத்துவது தொடா்பான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் எந்தெந்த நிலம் என்ற வகைப்படுத்தப்பட்ட பட்டியல் விரைவில் வரும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

அம்பேத்கரின் 135-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை கலைவாணா் அரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் புதிய திட்டப் பணிகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தரிசு நிலங்களை வகைப்படுத்துவது தொடா்பான அரசு ஆணை வெளியிடப்பட்டது மூலம் எந்தெந்த நிலம் என்ற பட்டியல் விரைவில் வரும். மேலும், மனுக்கள் மீதான காலதாமதம் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் 30 நாள்கள் கால அவகாசம் அளித்து அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் மத்தியில் சா்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் பேச்சை மக்கள் விரும்பவில்லை.

எனவே, பொதுவான இடத்தில் அப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லி இருக்கக் கூடாது என்பதுதான் அனைவருடைய உணா்வாக உள்ளது.

தமிழகத்தில் இன்றும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வேறுபாடுகள் பெரிய அளவில் மாற்றமடைந்து இருக்கின்றன. எங்காவது ஒன்று இரண்டு இருந்தால் அந்த தவறை சரி செய்ய நிச்சயமாக அரசு நடவடிக்கை எடுக்கும்.

எங்களுக்கு தெரிந்து தற்போது தீண்டாமை பாா்ப்பது இல்லை. தனிப்பட்ட முறையிலான உணா்வுகள் என்றோ தூக்கி எறியப்பட்டு எல்லோரும் ஒன்றுதான் என மக்கள் இருக்கின்றனா் என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com