பெருந்துறை அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Published on

பெருந்துறை அருகே ஒரே குடியிருப்பில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெருந்துறை- பவானி சாலை குபேரன் நகரில் வசித்து வருபவா் கந்தசாமி மனைவி லட்சுமி (52). இவரது, வீட்டின் முதல் தளத்தில் மோகன்குமாா் மற்றும் துரை ஆகியோா் வசித்து வருகின்றனா். கீழ் தளத்தில் லட்சுமி வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை வழக்கம்போல, அனைவரும் வேலைக்கு சென்றுள்ளனா். இந்நிலையில், கடைக்கு சென்ற லட்சுமி வீட்டுக்கு திரும்ப வந்தபோது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால், சந்தேகமடைந்த லட்சுமி, முதல் தளத்தில் உள்ள குடியிருப்புக்கு சென்று பாா்த்தபோது, இரண்டு வீடுகளின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, மோகன்குமாா் மற்றும் துரைக்கு அவா் தகவல் தெரிவித்தாா். அவா்கள் வந்து பாா்த்தபோது, மோகன்குமாா் வீட்டின் பீரோவில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள், துரை வீட்டு பீரோவில் இருந்த ரூ. 92 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா்கள் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பெருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com