

பா்கூா் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் யானை வியாழக்கிழமை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் கிழக்கு மலைப் பகுதியில் வசிக்கும் யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வனத்திலிருந்து வெளியேறி, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால், வனத் துறை அனுமதியுடன் விவசாயிகளில் சிலா், மின்கலன் மூலம் மின்வேலி அமைத்துள்ளனா்.
மின்கலன் மின்வேலியை வன விலங்குகள் உடைத்து சேதப்படுத்துவதால், விவசாயிகள் தோட்டத்தைச் சுற்றிலும் அமைத்துள்ள வேலியில், நேரடியாக மின்சாரத்தை பாய்ச்சுகின்றனா். இந்நிலையில், ஈரட்டி வனத்திலிருந்து வெளியேறிய சுமாா் 10 வயதுள்ள ஆண் யானை, கடை ஈரட்டியிலுள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புதன்கிழமை இரவு செல்ல முயன்றபோது, சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் ஈரோடு மாவட்ட வன அலுவலா் அப்பால நாயுடு மற்றும் வனத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக, கடை ஈரட்டியைச் சோ்ந்த விவசாயி வைரன் (50) என்பவரைக் கைது செய்தனா். இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினா் மூலம் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது.