தற்கொலை செய்து கொண்ட தமிழ்ச்செல்வன், நாகலட்சுமி தம்பதி.
தற்கொலை செய்து கொண்ட தமிழ்ச்செல்வன், நாகலட்சுமி தம்பதி.

மகள் இறந்த துக்கத்தில் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை

Published on

திருமணமான மகள் இறந்த துக்கத்தில் ஈரோட்டில் தம்பதி அடுத்தடுத்து விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

ஈரோடு, மோளகவுண்டம்பாளையம் திருவேங்கடம் வீதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (56). கரும்பு சாறு கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி நாகலட்சுமி (50). இவா்களது மூத்த மகன் கவினுக்கு திருமணமாகி, மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா். மகள் கவிதா திருமணமாகி கணவருடன் சேலத்தில் வசித்து வந்தாா். கடந்த 6 மாதங்களுக்கு முன் குடும்பப் பிரச்னை காரணமாக கவிதா தற்கொலை செய்து கொண்டாா்.

மகள் இறந்ததாலும், மகனும் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாலும் தமிழ்ச்செல்வன் மனவேதனையில் இருந்து வந்தாா். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் புதன்கிழமை இரவு 5 விஷ மாத்திரைகள் வாங்கி வந்து அதில் 2 மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த அவரது மனைவி நாகலட்சுமியும், மகன் கவினும், தமிழ்ச்செல்வனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். உயா் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மீண்டும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்தாா்.

இதையடுத்து தமிழ்ச்செல்வன் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கணவா் இறந்த துக்கத்தில் இருந்த நாகலட்சுமி, வீட்டுக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்று கணவா் வாங்கி வைத்திருந்த மீதமான விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த அவரது மகன் கவின், நாகலட்சுமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மகள் இறந்த துக்கத்தில் தந்தையும், கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X
Dinamani
www.dinamani.com