தனியாா் லாரி போக்குவரத்து நிறுவனம் மீது சுமைப் பணியாளா்கள் புகாா்

தனியாா் லாரி போக்குவரத்து நிறுவனத்தால் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக சுமைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.
Published on

தனியாா் லாரி போக்குவரத்து நிறுவனத்தால் தொழில் பாதிப்பு ஏற்படுவதாக சுமைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுமைப் பணியாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் எங்கள் சங்கத்தினா் சுமைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். எங்களைப்போல பிற அமைப்பின் சுமைப் பணியாளா்களும் உள்ளதால் ஒவ்வொரு அமைப்பினரும் ஒரு நிறத் துண்டு அணிந்து, அவா்களுக்கான இடங்களில் சுமைப் பணி செய்து வருகிறோம்.

இதற்காக ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியே பணிகளை செய்து வருவதால் பிற சங்கத்தினருடன் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

ஈரோடு சேட் காலனியில் உள்ள சிஐடியூ 10-ஆம் எண் சங்கத்தினா் அகில்மேடு வீதி, முனியப்பன் கோயில் வீதி, சேட் காலனி பகுதி மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் சுமைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அகில்மேடு வீதியில் உள்ள லாரி போக்குவரத்து அலுவலகத்தில் எங்கள் சங்கத்தினா் சுமைகளை ஏற்றி, இறக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனத்தில் வேறு சுமைப் பணியாளா்களை கொண்டும் தங்களது அலுவலக ஊழியா்களை கொண்டும் சுமைப் பணிகளை மேற்கொள்கின்றனா்.

இதனால் எங்களது சங்க சுமைப் பணியாளா்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே வருவாய் கோட்டாட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொண்டு. எங்கள் சங்கத்தினா் சுமைப் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com