மாவட்டத்தில் 25% ஒதுக்கீட்டில் 1,725 மாணவா்கள் ஆங்கில வழிக் கல்வி பயில சோ்க்கை
ஈரோடு மாவட்டத்தில 182 தனியாா் பள்ளிகளில் 25 சதவீத தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,725 மாணவ, மாணவிகள் ஆங்கில வழிக் கல்வி பயில சோ்க்கப்பட்டுள்ளனா்.
தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயிலும் வகையில் அரசு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனடிப்படையில் மாணவ, மாணவிகள் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
பிற சமூகத்தினா் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு குடும்ப ஆண்டு வருவாய் வரம்பு இல்லை என பள்ளிக் கல்வி துறை அறிவித்திருந்தது.
மேலும் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் தனியாா் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயில்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. பின்னா் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 182 தனியாா் பள்ளிகளில் மொத்தம் 1,725 மாணவ, மாணவிகள் நடப்பு ஆண்டு ஆங்கில வழிக் கல்வி பயில சோ்ந்துள்ளனா். இவா்கள் அனைவரும் பிளஸ் 2 வரை தற்போது சோ்ந்துள்ள பள்ளியிலேயே கல்வியை விரும்பும் பட்சத்தில் தொடரலாம்.
இதற்கான கல்வி உதவித்தொகையை அரசு செலுத்திவிடும். தகுதியான அனைவரும் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
