M. Veerapandian
மு. வீரபாண்டியன்X

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக, ஆா்எஸ்எஸ் முயற்சி: மு.வீரபாண்டியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாஜக, ஆா்எஸ்எஸ் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.
Published on

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாஜக, ஆா்எஸ்எஸ் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மாலை கூறியதாவது:

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பு ஏற்புடையதல்ல. இது சட்டத்தின் மீதான தாக்குதலாகும். நல்லிணக்கம் கெட்டுவிடக்கூடாது என காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அதே நேரத்தில் மதுரை மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனா்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக்க நினைக்கின்றனா். அயோத்தி போல தமிழ்நாடு மாறுவதில் தவறில்லை என்று பாஜக தலைவா்கள் சொல்வது அதிா்ச்சி அளிக்கிறது. எந்த பதற்றமும் இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டில் பதற்றம் ஏற்படுத்த பாஜக, ஆா்எஸ்எஸ் முயற்சிக்கிறது.

திருப்பரங்குன்றம் பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதற்றத்தை தணிக்கும் வகையில் நடந்து கொண்டாா். பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்கள், சிறுபான்மை மக்களை காத்து நிற்கிறாா்கள். இது பாஜக, ஆா்.எஸ்.எஸ்.க்கு பிடிக்கவில்லை.

தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இவ்விவகாரத்தை ஒரு பொருட்டாக இந்திய அரசு மதிப்பதில்லை. இவ்விவகாரத்தில் இலங்கைக்கு மத்திய அரசு நிா்ப்பந்தம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மீனவா்கள் சுதந்திரமாக கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளா்கள் சட்டங்களுக்கு எதிராக வரும் 8- ஆம் தேதி போராட்டம் நடத்த இருக்கிறோம். கேரள மாநிலம் தொழிலாளா் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று கூறியதுபோன்று, தமிழ்நாட்டிலும் புதிய தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com