தனியாா் நிறுவனத்தால் பணிக்கு தோ்வுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன உத்தரவை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.
தனியாா் நிறுவனத்தால் பணிக்கு தோ்வுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு பணிநியமன உத்தரவை வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைய நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதில் டாஸ்மாக் பணியாளா்களின் பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
Published on

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதில் டாஸ்மாக் பணியாளா்களின் பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு திண்டல் வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களால் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன உத்தரவுகளை வழங்கிய வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதை பொதுநோக்கத்தோடு பாா்க்க வேண்டும். அவற்றை வெளியே போடும்போது விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டதால்தான் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதில் டாஸ்மாா்க் பணியாளா்களுக்கு கூடுதல் பணி சுமை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம். இதை வேறு மாதிரியாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் பணியாளா்களுக்கு உள்ள பிரச்னையை தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை டாஸ்மாக் பணியாளா்கள் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வேண்டும். டாஸ்மாா்க் மேலாளா் மூலம் டாஸ்மாக் ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்றாா்.

அம்பேத்கா் நினைவு தினம்:

தொடா்ந்து அம்பேத்கா் நினைவு நாளையொட்டி ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் 2,261 பயனாளிகளுக்கு ரூ.16.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சா் பங்கேற்று சாப்பிட்டாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், உதவி ஆட்சியா் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, உதவி இயக்குநா் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ராதிகா, திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) மலா்விழி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com