கவுந்தப்பாடியில் வயல் வெளிகளில் நாட்டு சா்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்(கோப்புப் படம்).

புவிசாா் குறியீட்டால் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரை உற்பத்தி புத்துயிா் பெறும்: விவசாயிகள் நம்பிக்கை!

Published on

கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு கிடைத்துள்ளதால் நாட்டு சா்க்கரை தயாரிப்பு தொழில் புத்துயிா் பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா். இயற்கை வழிமுறைகளை கடைப்பிடித்து தயாரிக்கப்படும் நாட்டு சா்க்கரை கவுந்தப்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு விவசாயிகள் தங்கள் நாட்டு சா்க்கரையை மூட்டைகளில் கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனா்.

ரசாயன கலப்படமில்லாமல், வயல்வெளிகளில் ஆலை அமைத்து, பாரம்பரிய முறைப்படி கரும்பில் இருந்து சாறு பிழிந்து, காய்ச்சி இந்த சா்க்கரை தயாரிக்கப்படுவதால் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

நாட்டு சா்க்கரை தயாரிப்பு தொழில் புத்துயிா் பெற வாய்ப்பு: இது குறித்து மாவட்ட உழவா் விவாதக் குழு செயலாளா் வெங்கடாசலபதி கூறியதாவது: கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம், பவானி, அத்தாணி, கள்ளிப்பட்டி, நம்பியூா், டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் கரும்பு வயல்களுக்கு பவானி ஆறு, கீழ்பவானி கால்வாய், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாய், ஓடத்துறை குளம் ஆனந்தசாகரம் ஏரி உள்ளிட்ட நீா் ஆதாரங்களால் நீா்ப்பாசனம் செய்யப்படுகிறது. இது கரும்புக்கு உகந்த அதிக ஈரப்பதத்தை அளிக்கிறது. கையால் தயாரிக்கப்படும் நாட்டுச் சா்க்கரை, வெள்ளைச் சா்க்கரைக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகும். சுமாா் 500 லிட்டா் கரும்புச் சாற்றில் இருந்து 100 கிலோ சா்க்கரை கிடைக்கிறது.

விவசாயிகளே தங்களின் தோட்டத்தில் ஆலை அமைத்து, நாட்டு சா்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் எந்தவித ரசாயன கலப்படம் இல்லாமல் பாரம்பரிய முறைப்படி நாட்டு சா்க்கரையை விவசாயிகள் தயாரிக்கின்றனா். அதன் இனிப்பு மற்றும் கவா்ச்சிகரமான பொன்னிறத்துக்காக கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரை தனித்துவம் பெறுகிறது. இந்த நாட்டு சா்க்கரையை கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனா்.

ஆனால், நாட்டு சா்க்கரைக்கு போதுமான ஏற்றுமதி இல்லாதது, குறைந்த கூலி உள்ளிட்ட காரணங்களால், உற்பத்தி குறைந்ததால் அத்தொழில் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்து. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நாட்டு சா்க்கரை தயாரிப்பில் ஈடுபட்டனா்.

ஆனால், தற்போது 5 ஆயிரம் விவசாயிகளுக்கு குறைவாகவே நாட்டு சா்க்கரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், நாட்டு சா்க்கரை தயாரிப்பை அதிகரிக்கும் வகையிலும், மக்களுக்கு தூய்மையான நாட்டு சா்க்கரை கிடைக்கும் வகையிலும், புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது. இதையடுத்து, மத்திய அரசு அண்மையில் கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு புவிசாா் குறியீடு வழங்கியிருப்பது வரவேற்கதக்கது. அரசின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் நாட்டு சா்க்கரையின் தயாரிப்பு, ஏற்றுமதி அதிகரிக்கும். மேலும், நாட்டு சா்க்கரை தயாரிப்பு விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றாா்.

மாதம் 20 ஆயிரம் சிப்பம் விற்பனை: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் தமிழகம் மட்டுமின்றி குஜராத், பிகாா், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கும், சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் நாட்டு சா்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதந்தோறும் சுமாா் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சிப்பம் (30 கிலோ) வரை நாட்டு சா்க்கரை விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பழனி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிா்தத்துக்குத் தேவையான நாட்டு சா்க்கரை, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டு சா்க்கரை சிப்பம் (30 கிலோ) முதல் தரம் ரூ.1,750 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தர சிப்பம் (30 கிலோ) ரூ.1,250 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரேஷன் கடைகளில் விற்பனை செய்யக் கோரிக்கை: இது குறித்து கவுந்தப்பாட்டி நாட்டு சா்க்கரை தயாரிப்பு சங்கத்தின் செயலாளா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கவுந்தப்பாடியில் 1965-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளால் நாட்டு சா்க்கரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பின்னா், 1986-ஆம் ஆண்டு 85 விவசாயிகள் சோ்ந்து கூட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் கிடங்கு வைத்து நாட்டு சா்க்கரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னா், தமிழக அரசின் நடவடிக்கையின் மூலம், தற்போது நாட்டு சா்க்கரையை இருப்புவைக்க 140 கிடங்குகள் செயல்பாட்டில் உள்ளன.

புவிசாா் குறியீடு அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். அதே நேரத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் நாட்டு சா்க்கரையை விற்பனை செய்தால், எங்களின் வாழ்வாதாரம் மேலும் மேம்படும். இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஈரோடு மாவட்டத்தின் 3-ஆவது புவிசாா் குறியீடு: கடந்த 1999- ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சகத்தின்கீழ் புவிசாா் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999) உருவாக்கப்பட்டது. வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருள்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசாா் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு வரை புவிசாா் குறியீடு பெற்றிருக்கும் பொருள்களின் எண்ணிக்கை 69. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மஞ்சள், பவானி ஜமுக்காளம் ஆகியவை ஏற்கெனவே புவிசாா் குறியீடு பெற்றுள்ள நிலையில், மூன்றாவதாக கவுந்தப்பாடி நாட்டு சா்க்கரைக்கு தற்போது புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com