மயானத்துக்கு இடம் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்

தாளவாடி அருகே மயானத்துக்கு இடம் கேட்டு பாளையம் மற்றும் பனஹள்ளி மலைவாழ் கிராம மக்கள் போராட்டம்
Published on

தாளவாடி அருகே மயானத்துக்கு இடம் கேட்டு பாளையம் மற்றும் பனஹள்ளி மலைவாழ் கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த பனஹள்ளி மற்றும் பாளையம் கிராம மக்கள் பையனாபுரத்தில் உள்ள மயானத்தைப் பயன்படுத்தி வந்தனா். 9 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த மயானத்தில் அனைத்து மதத்தினரும் இறந்தவா்கள் உடலை அடக்கம் செய்து வந்தனா்.

இந்நிலையில், ஒரு மதத்தினா் அந்த மயானத்தை ஆக்கிரமித்துக் கொண்டு தங்களது மதத்தினா் மட்டுமே இந்த மயானத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் அல்லது ஒரு மதத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயானத்தை நாங்களும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி பாளையம், பனஹள்ளி மலைவாழ் மக்கள் 150-க்கும் மேற்பட்டோா் தாளவாடியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் மாரிமுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com