ஆசனூா் மலைப் பகுதியில் மாடுகளைத் துரத்திய சிறுத்தை
சத்தியமங்கலம் அருகே ஆசனூா் மலைப் பகுதியில் பட்டப்பகலில் மாடுகளைத் துரத்திய சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில்
சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்தில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகள் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூா் மலைப் பகுதியில் புதன்கிழமை பட்டப்பகலில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகளை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை துரத்தியது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது.
இதில், சிறுத்தை துரத்தும்போது மாடுகள் வேகமாக ஓடி தப்பின. பட்டப் பகலில் சிறுத்தை கால்நடைகளை துரத்திய சம்பவம் ஆசனூா் மலைப் பகுதியில் வசிக்கும் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

